உடனடியாக புதிய வீடு ஒன்றில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் அருண்(உதயநிதி ஸ்டாலின்) ஒரு தரகர் மூலமாக சோமு (பிரசன்னா) என்பவன் தங்கியிருக்கும் வீட்டை பகிர்ந்துகொள்ள சம்மதிக்கிறான். அன்று இரவு, முன்பின் தெரியாத ஒரு பெண்ணுக்கு (பூமிகா) உதவுவதற்காக, அவளது காரை ஓட்டிச்சென்று அவளை வீட்டில் கொண்டுவிட்டு வருகிறான். காரை எடுத்துச் சென்றுவிட்டு அடுத்த நாள் கொண்டுவிடுமாறு அந்த பெண் சொல்கிறாள். ஆனால், அடுத்த நாள் அந்த காரின் பின்புறத்தில் அந்த பெண் பிணமாகக் கிடக்கிறாள். கொலைப் பழியில் இருந்து தப்பிப்பதற்காக அருணும், சோமுவும் செய்யும் காரியங்கள் அவர்களை இன்னொரு கொலைப்பழி உட்பட மேலும் பல சிக்கல்களில் சிக்க வைக்கின்றன. இறுதியில் அருண், சோமுவுக்கு என்ன ஆனது? இறந்த பெண் யார்? அவரை கொன்றது யார்? என பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது மீதி திரைக்கதை.
அருள்நிதி நடித்த ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இயக்குநர் மு.மாறன் மீண்டும் அதே க்ரைம் த்ரில்லர் கதையுடன் களமிறங்கியிருக்கிறார். திடீரென நிகழும் கொலை, செய்யாத கொலைக்கான பழியில் நாயகன் சிக்கிக்கொள்வது, அடுத்தடுத்து மேலும் பல சிக்கல்களில் மாட்டிக்கொள்வது என மர்ம முடிச்சுகளை பின்னிக்கொண்டே செல்வது, இறுதியில் அந்த முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, உண்மை வெளிப்படுவது என சவால்களும், சுவாரஸ்யத்துக்கான வாய்ப்புகளும் நிறைந்த திரைக்கதை பாணியை கையில் எடுத்திருக்கிறார் மாறன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்