உலகக் கோப்பை 2023 தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா போட்டியில் ஆஸ்திரேலியா எந்தவித போராட்டமும் இல்லாமல் சரண்டர் ஆனது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முதலில் பேட் செய்து தவறிழைத்த பாட் கம்மின்ஸ் நேற்று டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தும் தவறிழைத்தார். இந்த இரு தவறுகளும் கம்மின்ஸுக்கு பாடம் கற்பிக்க தவறவில்லை. இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவை சாத்தி எடுத்து விட்டது.
என்ன சோடை போனாலும் ஆஸ்திரேலிய பீல்டிங் சோடை போகாது. ஆனால் அதுவும் நேற்று பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்க்கு சவால் அளிக்கும் விதமாக அமைந்தது. ஆஸ்திரேலிய பீல்டர்கள் நேற்று 7 கேட்ச்களை தவறவிட்டனர். இதுபோன்ற தவறுகளால் 311 ரன்கள் இலக்கை விரட்டும் போது 43 ரன்கள் எடுப்பதுக்குள்ளாகவே 6 விக்கெட் என்று தடுமாற்றத்தை உச்சிக்கே சென்றுவிட்டனர். போதாக்குறைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடுவர்களும் விளையாடினர். ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கிய எல்.பி.டபிள்யு தீர்ப்பைப் போல் ஒரு மோசமான தீர்ப்பு இருக்க முடியாது. அதேபோல் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கேட்ச் நிச்சயம் அவுட் அல்ல. இரு தடவையும் ககிசோ ரபாடாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்