அபியா: ஆடவருக்கான ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்று போட்டி சமாவோ நாட்டின் தலைநகரான அபியாவில் நடைபெற்றது. இதில் சமாவோ - வனுவாட்டு அணிகள் மோதின. முதலில் பேட்செய்த சமாவோ 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேனான டேரியஸ் விசர் 62 பந்துகளில், 14 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி 20-ல் சதம் விளாசிய முதல் சமாவோ வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் இந்த இன்னிங்ஸில் வனுவாட்டு வேகப்பந்து வீச்சாளர் நளின் நிபிகோ வீசிய 15-வது ஓவரில் டேரியஸ் விசர் 6 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்தார். இதில் 3 நோ-பால்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை தான் பங்கேற்ற 3-வது போட்டியிலேயே நிகழ்த்தியுள்ளார் 28 வயதான வலது கை பேட்ஸ்மேன் டேரியஸ் விசர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்