நடிகர் சித்தார்த், 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியுடன் இணைந்து நடித்தார். அப்போதிருந்து இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. அதை உறுதிப்படுத்தும் விதமாக, பட விழாக்களுக்கு இருவரும் ஒன்றாகச் செல்வதும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருந்தனர். இதற்கிடையே இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம், தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கபூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இதில், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் மணமக்களின் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருமணப் புகைப்படங்களை அதிதியும் சித்தார்த்தும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். திரையுலகினர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்