துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் 904 புள்ளிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பும்ரா முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 904 புள்ளிகள் சேர்த்து அஸ்வினின் சாதனையை பும்ரா சமன் செய்திருந்தார். மெல்பர்ன் போட்டியில் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதனால் கூடுதலாக 3 புள்ளிளை பெற்று புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் பும்ரா. இதன் மூலம் உலக அரங்கில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்றவர்களின் பட்டியலில் 17-வது இடத்தை இங்கிலாந்தின் டேரக் அண்டர்வுட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பும்ரா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்