திருவனந்தபுரம்: தமிழில், ‘தொண்டன்’, ‘செம’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘வெண்ணிலா கபடிகுழு 2’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை அர்த்தனா பினு. மலையாள நடிகர் விஜயகுமாரின் மகள் இவர். அர்த்தனாவின் தாய் பினுவும் விஜயகுமாரும் விவாகரத்து பெற்றுள்ளனர். தனது தாயுடன் வசித்து வரும் அர்த்தனா, தனது வீட்டுக்குள் புகுந்து விஜயகுமார் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர், “சுற்றுச் சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்கு வரும் விஜயகுமார், ஜன்னல் வழியாக எனது சகோதரிக்கும் பாட்டிக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். நான் நடிக்கக் கூடாது என்றும் அவர் ஒப்பந்தம் செய்த படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். அவர் மீது பலமுறை புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ஜன்னல் வழியாக நடிகர் விஜயகுமார் சத்தம் போடும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். நடிகையின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்