‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ என்ற முழு நீள ஸ்பூஃப் வகை திரைப்படங்களை தமிழுக்கு அறிமுகம் செய்து, அதில் வெற்றியும் பெற்ற சி.எஸ்.அமுதன் முதன்முறையாக தனது நகைச்சுவை பாணியை கைவிட்டு சீரியஸ் கதைக்களத்துடன் இறங்கியிருக்கும் படம் ‘ரத்தம்’.
மனைவி இறந்த பிறகு கொல்கத்தாவில் தன் மகளுடன் வசித்து வருகிறார் முன்னாள் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் குமார் (விஜய் ஆண்டனி). தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சோகத்தால் கடந்த காலத்தின் தொடர்புகளில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார். சென்னையில் அவரது நண்பர், மர்ம நபர் ஒருவரால் பத்திரிகை அலுவலகத்திலேயே கொடூரமாக கொல்லப்படுகிறார். தனது வளர்ப்புத் தந்தையும் பத்திரிகை நிறுவன அதிபருமான நிழல்கள் ரவியின் வேண்டுகோளின்படி மீண்டும் சென்னைக்கு வருகிறார். வந்தவர், தனது நண்பன் செழியனின் கொலைக்கான பின்னணியை ஆராய தொடங்கும்போது அவருக்கு பல தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. செழியனின் கொலையைத் தொடர்ந்து ஒரு மாவட்ட ஆட்சியரும் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஒரு குழு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்கிறார். அந்த கும்பல் யார், அவர்களது நோக்கம் என்பதைக் கண்டறிவதற்கான ஹீரோவின் பயணமே ‘ரத்தம்’ படத்தின் திரைக்கதை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்