சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்’ சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது சுற்று ஆட்டத்தில் நேற்று இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், ஹங்கேரியின் சனான் சுகிரோவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 40-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவருக்கு முழுமையாக ஒரு புள்ளி கிடைத்தது. இந்த தொடரில் குகேஷ் கைப்பற்றும் 2-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் குகேஷ் 3.5 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஹரிகிருஷ்ணா தனது 5-வது சுற்றில் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகிருண்ஷா 51-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவோன் அரோனியன் மோதிய ஆட்டம் 55-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 56-வது நகர்த்தலின் போது உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ் வெற்றி பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்