பெனோனி: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பெனோனி நகரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான இந்திய அணி மீண்டும் ஒரு முறை பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. இம்முறை கேப்டன் உதய் சஹாரன், சச்சின் தாஸ் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த பார்மில் உள்ளனர். அதே வேளையில் பந்து வீச்சில் முஷீர் கான், சவுமிகுமார் பாண்டே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2012 மற்றும் 2018-ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதி உள்ளன. இந்த இரு முறையும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. இம்முறை ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஹக் வெய்ப்ஜென், தொடக்க பேட்ஸ்மேன் ஹாரி டிக்சன், வேகப்பந்து வீச்சாளர்கள் டாம் ஸ்ட்ராக்கர், கேலம் விட்லர் ஆகியோர் நிலையான செயல்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சவால்தரக்கூடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்